Skip to main content

Posts

Showing posts from May, 2018

புட்டியும் உடையவில்லை வாத்தும் சாகவில்லை

 ஜென் துறவி நான்சனிடம் அவருடைய மாணவரான ரிகோ ஒரு பழைய புதிருக்கான விடையைக் கேட்டார். “ஒருவன் ஒரு வாத்துக் குஞ்சைக் கண்ணாடிப் புட்டியில் இடுகிறான். அதற்கு நாள்தோறும் உணவும் இடுகிறான். வாத்து வளர்ந்தது. இப்போது ஒரு கேள்வி? கண்ணாடிப் புட்டியிலிருந்து வாத்தை உயிருடன் வெளியே வரவைக்க வேண்டும். கண்ணாடிப் புட்டியையும் உடைக்கவே கூடாது”. கண்ணாடிப் புட்டியின் கழுத்தோ சிறியது. வாத்தால் வெளியே வர முடியாது. புட்டியையும் உடைக்கக் கூடாது; வாத்தும் கொல்லப்படக் கூடாது. வாத்து முழுமையாக உயிருடன் வெளியே வர வேண்டும். புட்டியும் சேதமாகாமல் இருத்தல் அவசியம். இங்கே அழித்தலோ உடைத்தலோ கூடாது. நான்சன் இந்தப் புதிரைப் பற்றி யோசித்துக்கொண்டே இருந்தார். அந்த விடையின் மீது தியானத்தைத் தொடங்கினார். அந்தப் பிரச்சினைக்கு விடை ஒன்றும் கிடைக்கவில்லை. திடீரென்று அந்தப் பிரச்சினையே இல்லையென்ற புரிதல் நான்சென்னுக்கு ஏற்பட்டது. தன்னிடம் அந்தப் புதிரைக் கேட்ட ரிகோவின் பெயரைச் சொல்லிக் கைகளைத் தட்டி ஒரு நாள் சத்தமிட்டார் நான்சென். “ரிகோ” ரிகோவிடம் சென்று, “வாத்து வெளியே வந்துவிட்டது” என்றார். வாத்து ஒருப

மாறும் நிலங்களை மொழிபெயர்க்கும் கவிஞன்

சிறுவயதிலேயே  ‘ வால்கா முதல் கங்கை வரை ’  நூலைப் படித்துவிட்டு உற்பத்தி உறவுகளின் கதையாக இந்த உலகத்தின் கதையை வாசிக்கத் தெரிந்த இந்திய ,  தமிழ் குடியானவன். யவனிகா என்று இவர் வைத்த பெயர் எழுத்தாளர் சுஜாதா நாவலின் பெயராக பின்னால் ஆனது.  1990- களில் ஏற்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளால் பாரம்பரியத் தொழிலை இழந்தவர்களில் ஒருவர். தலித் அரசியல் ,  தலித் இலக்கியம் ,  சோவியத் உடைவுக்குப் பின் மார்க்சியம் சந்தித்த நெருக்கடி ,  பின் நவீனத்துவ , அமைப்பியல் கோட்பாட்டு விவாதங்களும் இவரது கவிதையில் கதைகளாக ,  கதாபாத்திரங்களாக ,  குழந்தைகள் விளையாடும் கூழாங்கற்களைப் போல உருளுகின்றன. வியாபாரத்துக்காக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அலையத் தொடங்கியபோது இவரது கவிதைகளில் மாறும் நிலங்கள் ,  தாவரங்கள் செறிவூட்டப்பட்டிருக்க வேண்டும். சிறு துணி வணிகனாக கிழக்கு ஆசிய நாடுகளிலும் பயணம் செய்யத் தொடங்கியபோது ,  ஒரு புதிய வர்த்தகக் காலனியாக உருவாகி மேல்கீழாக மாறப்போகும் இந்தியாவின் நிலங்களை மனிதர்களை தீர்க்க தரிசனமாகப் பார்த்துவிட்டான் யவனிகா. அப்படியாக ஊகித்து உணர்ந்த அவனது கவிதைகளின் முதல் தொகு

சினேகமுடன் பாலா

த ந்தை, தாய்க்கிடையே பிணக்கையும் தீராத சச்சரவையும் பார்த்து வளரும் குழந்தைகள் ஆரம்பத்திலேயே பாரம்பரியம், கவுரவம் போன்ற விஷயங்களில் நம்பிக்கை இழந்துவிடுகின்றன’ - தாஸ்தாயெவ்ஸ்கிக்காக கோணங்கி தொகுத்து வெளியிட்ட ‘கல்குதிரை’ சிறப்பு மலரில் பார்த்த இந்த வாக்கியம்தான், பள்ளிப் பருவத்திலேயே எழுத்தைத் துறையாகத் தேர்ந்தெடுக்க வைத்தது. மகிழ்ச்சியற்ற குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகள்தான் அதிகமாக லௌகீக உத்தரவாதமற்ற துறைகளை நோக்கி ஈர்க்கவும்படுகின்றனர் என்று தோன்றுகிறது. எனது துக்கம் இந்த உலகிலேயே தனியானது என்று நினைத்திருந்த 15 வயதில், “உன்னைப் போலத்தான் பாலகுமாரனுக்கும் அப்பாவைக் கண்டால் ஆகாது” என்ற அறிமுகத்துடன் கொடுக்கப்பட்டது ‘சினேகமுள்ள சிங்கம்’ நாவல். இப்படித்தான் பாலகுமாரன் எனக்கு அறிமுகமானார். அடுத்த 10 நாட்களிலேயே ‘இரண்டாவது சூரியன்’ கிடைத்துவிட்டது. என் தந்தையாரோடு நான் பழகிக்கொண்டிருந்த ரவுத்திரத்தையும் என் அம்மா மீதான நேசத்தையும் மகத்துவப்படுத்தியவர் பாலகுமாரன். தாய்க்கும், காதலிக்கும், மனைவிக்கும் தாயுமானவனாக விளங்கும் ஒரு ரொமாண்டிக்கான ஆணை எனக்குள் லட்சிய உருவமாக மா

தொட்டில் ஆடிக்கொண்டு தான் இருக்கிறது

எங்கே ஆடுகிறது அந்தத் தொட்டில் என் குழந்தை வளர்ந்து விட்டாள் ஆனால் தொட்டில் ஆடும் சத்தம் கேட்கிறது தூளியை ஆட்டி ஞாபகமிருந்த ஒரே ஒரு தாலாட்டைப் பாடிய பெரியம்மாவும் இப்பூமியில் இல்லை ஆனாலும் தொட்டில் ஆடிக்கொண்டு தான் இருக்கிறது. தொட்டில் கம்பு கொண்டுவந்த நெல்லையப்பன் அத்தான் இப்போது இல்லை ஆனாலும் தொட்டில் ஆடிக்கொண்டு தான் இருக்கிறது. முதல்முறையாக வண்ணங்களை என் மகள் அறிவதற்கு சொல்லித்தந்த கிளி எங்கே போனது தெரியவில்லை ஆனாலும் தொட்டில் எங்கோ ஆடிக்கொண்டு தான் இருக்கிறது.

திருட்டுப்பூனை

வீட்டின் தாழ்வார மிதியடியருகே   அடுத்த காலடி நெருக்கத்தில்   கருமையும் வெள்ளையும் மினுமினுத்து நெளிய   ஒரு குண்டு உடலைப் பார்த்தேன்   திடுக்கிட்ட பிறகுதான்   பூனை என்று எண்ணம்  முழுமையாய் வரைந்தது நான் பார்த்த பிறகு அது ஓடிவிட்டது நான் பார்க்காத வேளையில்   அது அங்கே வந்து இருந்து   சில நிமிடங்கள் ஆகியிருக்கும்   படியிறங்கி ஓடி   காம்பவுண்ட் சுவரைத் தாண்டுவதற்கு முன்னால்   அதற்கு நான் வரைந்த உடலை   அதுவே தொகுக்கும் வேலை. ஆனால் நானோ அதன் முகத்தைக் கூட முழுமையாகப் பார்க்காமல் திருட்டுப் பூனை திருட்டுப் பூனை திருட்டுப் பூனை என்று புதுசாய்க் கண்டுபிடித்த எக்களிப்பில் நானே வரைந்த பூனையைத் துரத்தி ஓடுகிறேன்.