Skip to main content

அதன் பெயர் அல்ல அநித்யா



காலை
மதியம்
இரவுகளில்
வாடிக்கையாக
எங்கள் வீட்டுக்கு வந்து
பாலும் பிஸ்கெட்டும்
சாப்பிடத் தொடங்கிய போது
அதன் மியாவ் ஆரோக்கியமாக
இருந்தது
சில நாட்கள்
தென்படாமல் போய்
என் மகளையும் ஏங்கவைத்தது
ஒரு நாள் முதுகில் நீளமான காயத்துடன்
வந்து
விடை சொல்வது போல்
நான் இல்லாத ஒரு நாளில்
அவசரமாய் சென்றுவிட்டதாம்

இன்னொரு நாள்
ஒரு கரும்பூனை படியேறிவந்து அழைக்க
அவசரமாய்த் தாவி ஓடியது
அதன் மியாவும் பலவீனமாகியிருந்தது
அதன் இன்னொரு செவலை வண்ணச் சகாவையும்
பாப்பா தெருவில் பார்த்திருக்கிறாள்
இப்போது பழைய காயம் ஆறிவிட்டது
சில புதிய கீறல்களையும்
நேற்று அதன் தலையில் பார்த்தேன்
அதன் மகிழ்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும்
நாங்கள் தான் பொறுப்பென்று
முதலில் நினைத்தோம்
புதிய காயங்களுக்காகவும்
வீட்டுக்கு வராமல் இருக்கும் வேளைகளிலும்
வருத்தப்படத் தொடங்கினோம்.

வரும்போது
என்னை நினைத்தால் போதுமென்று
சிறிது காலத்திலேயே
எங்களைப் பழக்கிவிட்டது பூனை
அதன் பெயர் அல்ல அநித்யா.

00

Comments