Skip to main content

எனது ஸ்ரீ - ராம் கோபால் வர்மா





 தமிழில்: ஷங்கர்



  விஜயவாடாவில் நான் பொறியியல் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த போது, ஸ்ரீதேவி நடித்த புதிய படம் வெளியாகும் போதெல்லாம் டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்கும்போது திரையரங்கின் வெளியே உள்ள விளம்பரத்தட்டிகளில் அவரது படத்தை அண்ணாந்து ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருப்பேன்.

அவரது அழகும் கவர்ச்சியும் மிக வலிமையானது. அவரிடம் இருந்த நடிகையை பார்வையாளர்களும் திரையுலகமும் தெரிந்து கண்டு உணர்வதற்கு நிறைய நிறைய வருடங்களும் படங்களும் தேவைப்பட்டன. என்னைப் பொறுத்தவரையில் அவரிடம் உள்ள நடிகையை மிகச்சரியான முறையில் மிஸ்டர் இந்தியா திரைப்படத்தின் மூலம் சேகர் கபூர் தான் வெளிப்படுத்தினார். அவர் ஆரம்பகாலங்களில் நடித்த படங்களிலேயே அவரது நடிப்புத்திறன் நன்கு வெளிப்பட்டிருக்கும்.

மிஸ்டர் இந்தியா திரைப்படத்தின் மூலம் பார்வையாளர்கள் புதிய ஸ்ரீதேவியை அடையாளம் கண்டனர். சேகர் கபூரின் அழகியல், அவரது அபாரமான அழகு மற்றும் நம்பமுடியாத நடிப்புத்திறன் இரண்டையுமே வெளிக்கொண்டு வந்தது.
நான் எனது முதல்படமான சிவா(உதயம்) திரைப்படத்துக்கான வேலையில் இருந்தபோது ஸ்ரீதேவியுடனான எனது பயணம் தொடங்கியது. சென்னையில் இருந்த நடிகர் நாகார்ஜூனாவின் அலுவலகத்திலிருந்து ஸ்ரீதேவி வீடு இருந்த அடுத்த தெருவுக்கு நடந்து செல்வேன். அப்போது ஸ்ரீதேவியின் வீட்டை வாயில்கதவிலிருந்து பார்ப்பேன். கேவலமாக தோன்றும் இப்படியான வீட்டில், அழகின் கடவுள் வாழ்வதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த அழகு தேவதையான ஸ்ரீதேவிக்கு, மனிதனால் வீடுகட்டவே இயலாது என்று நான் நினைத்தேன். அவர் வீட்டை விட்டு வெளியே வரும்போதோ வீட்டுக்குள் நுழையும் போதோ அவரை கொஞ்சூண்டாவது பார்த்துவிட மாட்டோமா என்று ஏங்கியிருக்கிறேன். எனது துரதிர்ஷ்டம், அப்படியான ஒரு விஷயம் நடைபெறவேயில்லை.

சிவா வெளியாகி பெரிய வெற்றிபெற்றது. ஸ்ரீதேவியுடன் ஒரு படம் செய்ய விருப்பமா என்று தயாரிப்பாளர் கோபால் ரெட்டி என்னிடம் வந்து கேட்டார். "உங்களுக்கு பைத்தியமா? அவரை வெறுமனே பார்ப்பதற்கே நான் சாவதற்கும் தயாராக இருக்கிறேன்" என்றேன். கோபால் ரெட்டி, அவரைப் பார்ப்பதற்கு ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். நான் அவரைப் பார்ப்பதற்காக காத்திருந்த அதே வீட்டில் தான் அந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு ஏழரை மணிக்கு அவரைப் பார்ப்பதற்காக சென்றோம். எங்களது அதிர்ஷ்டமோ என்னவோ, அவர் வீட்டில் அப்போது மின்சாரம் இல்லை. நான் அந்த வீட்டின் வரவேற்பறையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், அந்த தேவதையின் வரவுக்காக காத்திருந்தபடி கோபால் ரெட்டியுடன் அமர்ந்திருந்தேன். எனது இதயம் துடிதுடித்துக்கொண்டிருந்தது. மும்பைக்கு செல்லும் விமானத்தைப் பிடிப்பதற்காக வேகவேகமாக தயாராகிக் கொண்டிருப்பதாக அவரது அம்மா கூறினார்.

நாங்கள் காத்திருந்த வேளையில் அவ்வப்போது வரவேற்பறையை கடந்து ஒரு அறைக்கும் இன்னொரு அறைக்குமாக அவசரத்தில் நடந்துகொண்டிருந்தார். தாமதத்துக்காக மன்னிப்பை கோரும் ஒரு புன்னகையையும் வெளிப்படுத்தினார். அவர் மெழுகுவர்த்தி ஒளியில் தோன்றும்போதும் மறையும்போதும் ஒரு இயக்குனராக ஸ்லோமோஷனில் அவரை முன்னும் பின்னும் நகர்த்தி கற்பனை செய்துகொண்டிருந்தேன்.
கடைசியாக அவர் வரவேற்பறைக்கு வந்து அமர்ந்தார். என்னுடன் பணிபுரிவதற்கு மிகவும் ஆவலாக இருப்பதாக சுருக்கமான வாக்கியங்களே பேசினார். இதையே அவர் மற்ற இயக்குனர்களிடமும் சொல்லியிருப்பார் என்பது எனக்கு நிச்சயம். அப்புறம் அவர் மும்பை கிளம்பிச்சென்றுவிட்டார். நான் அவரது அம்மாவுடன் மிகுந்த மரியாதையுடனும் பிரமிப்புடனும் பேசிக்கொண்டிருந்தேன். ஏனெனில் அவர் ஸ்ரீதேவியைப் பெற்றெடுத்தவர்.
சொர்க்கத்தில் மிதக்கும் களிப்புடன் என்னிடத்துக்கு வந்துசேர்ந்தேன். ஸ்ரீதேவி என் எதிரே மெழுகுவர்த்தி ஒளியில் உட்கார்ந்திருந்த காட்சி என் மனதில் தேர்ந்த ஓவியம் போல என் மூளையிலும் மனதிலும் பதிந்து நிறைத்த நிலையில் நான் க்ஷண க்ஷணம் திரைக்கதையை எழுதத் தொடங்கினேன்.
நான் ஸ்ரீதேவியை கவர்வதற்காக மட்டுமே அத்திரைக்கதையை எழுதினேன்.  க்ஷண க்ஷணம் திரைக்கதை, அவருக்கு நான் எழுதிய காதல்கடிதம்.

அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காலம் முழுவதும் ஸ்ரீதேவியின் அழகிலிருந்தும் அவரது ஆளுமையிலிருந்தும் கம்பீரத்திலிருந்தும் என்னால் கண்களை விலக்கவே இயலவில்லை. அவரைச் சுற்றி கண்ணுக்குத் தெரியாத ஒரு சுவரை எழுப்பியிருந்தார். அதை கடப்பதற்கு யாரையும் அனுமதிப்பதில்லை. அந்த சுவருக்குப் பின் னால் தனது கௌரவம் மற்றும் சுயமரியாதையைப் பராமரித்துவந்தார். அவருடன் பணிபுரியும் போது ஒரு இயக்குனராக நடிப்பு மற்றும் கதாபாத்திரமாதலின் நுட்பங்களை மேலதிகமாக புரிந்துகொள்ளத் தொடங்கினேன். சினிமா நடிப்பு என்றால் என்ன என்பது குறித்த ஒரு வரையறையையே என்னிடம் அவர் உருவாக்கினார். அது பல நேரங்களில் மிகமிக சிக்கலானது. பல நேரங்களில் நாடக நடிப்பை விட நல்லபலன் தருவது.

க்ஷண க்ஷணம் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியை எடுத்துக் கொண்டிருந்தோம். ஸ்ரீதேவியும் நடிகர் வெங்கடேசும் ஆடும் பாடல் காட்சியை எடுத்துக்கொண்டிருந்தோம். அந்த ஷாட் முடிந்ததும் நான் அற்புதம் என்று கூறினேன். நடன இயக்குனரோ கூடுதலாக மற்றொரு டேக் வேண்டும் என்றார். அது முடிந்ததும் மீண்டும் நான் அற்புதம் என்றேன். நடனஇயக்குனர் மறுபடி ஒரு டேக் போகவேண்டும் என்றார்.

நான் எனது உதவியாளரிடம், "ஏன் இந்த ஆள் திரும்ப திரும்ப ஒன்மோர் கேட்கிறார்" என்றேன். "

சார், நீங்கள் ஸ்ரீதேவியை மட்டுமே பார்க்கிறீர்கள். அவர் வெங்கடேஷைப் பார்க்கிறார்" என்றார் எனது உதவியாளர்.

ஆமாம், ஸ்ரீதேவி திரையில் இருக்கும்போது யார் இருந்தால் என்ன? என்ன நடைபெற்றால் என்ன? நானும் லட்சக்கணக்கான ரசிகர்களும் அவரை மட்டுமே பார்ப்பதற்கு பழக்கப்பட்டிருக்கிறோம்.

அவருக்கு அப்போதிருந்த புகழையும் நட்சத்திர அந்தஸ்தையும் பார்த்தால்தான் நம்பமுடியும். நாங்கள் கஷண க்ஷணம் படத்தின் க்ளைமாக்சைப் படம்பிடிக்க நந்தியால் நகரில் இருந்தோம். ஸ்ரீதேவி தங்கள் ஊரில் இருக்கிறார் என்பது தெரிந்தவுடன் நகரமே ஸ்தம்பித்துவிட்டது. வங்கிகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தின் அலுவல்களும் நடைபெறவேயில்லை. அனைவரும் ஸ்ரீதேவியைப் பார்க்க விரும்பினார்கள்.

அவர் நந்தியாலில் உள்ள பயணிகள் விடுதியில் தங்கியிருந்தார். நானும் வெங்கடேஷூம் அதன் அருகில் உள்ள பங்களா ஒன்றில் தங்கியிருந்தோம். ஸ்ரீதேவி தங்கியிருந்த வீட்டைச் சுற்றி குறைந்தபட்சம் எப்போதும் பத்தாயிரம் பேர் இரவிலும் வேடிக்கை பார்க்க நின்றார்கள். ஐம்பது உள்ளூர் அட்கள் மட்டும் நூறு போலீசார்கள் அவர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.


நாங்கள் படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் இருக்கும்போது, ஒரு பிரம்மாண்டமான புழுதிப்புயல் எங்கள் இடத்தை நோக்கி நகர்ந்து வருவதிலிருந்து ஸ்ரீதேவி வருவதை நாங்கள் அறிந்துகொள்வதை வழக்கமாக வைத்திருந்தோம். அவரது காருக்குப் பின்பு ஓடிவரும் ஆயிரக்கணக்கான மக்களினால் ஏற்படும் புழுதி அது.

போதும்...இனியும் ஸ்ரீதேவி தொடர்பான எனது உணர்வுகளை நான் நீட்டிக்கொண்டே போக விரும்பவில்லை. க்ஷண க்ஷணம் திரைப்படத்தை முடித்துவிட்டு அவருடன் கோவிந்தா கோவிந்தாவில் பணிபுரிந்தேன். அதற்குப்பிறகு சீக்கிரத்திலேயே அவர் நிறைய தனிப்பட்ட துயரங்களைச் சந்தித்தார். அவர் தந்தையின் மரணமும் அம்மாவின் மனநலமின்மையும் அவரைப் பாதித்தது.



தேசம் முழுவதும் ஆண்கள் விரும்பும் ஒரு பெண் திடீரென்று தனிமையான உலகத்திற்குள் விடப்பட்டார். போனி கபூர் அந்த வெற்றிடத்தை நிரப்ப உள்ளே வரும்வரை அது அப்படியேதான் இருந்தது.

போனியின் வீட்டில் ஒரு சாதாரண இல்லதரசியாக ஸ்ரீதேவி,தேநீர் பரிமாறுகையில் தான் நான் அவரைப் பார்த்தேன். சொர்க்கத்திலிருந்து தேவதை ஒன்றை சாதாரண இல்லதரசியாக படியிறக்கியதற்காக நான் போனிகபூரை வெறுத்தேன்.

என்னால் இப்போதெல்லாம் போனியின் வீட்டுக்குப் போக முடியவில்லை. என்னால் ஸ்ரீதேவியை யதார்த்தமான ஒரு வீட்டில் யதார்த்தமான சூழ்நிலையில் யதார்த்தமான மனிதர்கள் சூழ காணவே முடியாது. என்னைப் பொறுத்தவரை அவர் விலைமதிக்கமுடியாத வைரம். சினிமாத்தனத்துக்குரிய புத்திசாலித்தனத்துடன் கூடிய கண்கவரும் இடங்களிலும் எழிலான அரங்க அமைப்புகளின் பின்னணியிலுமே அவர் இருக்கவேண்டும்.

கடவுள் உருவாக்கியதில் ஸ்ரீதேவிதான் மிகமிக அழகிய மிகமிக கவர்ச்சியான பெண். அவர் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இதுபோன்ற அரிதான கலைப்பொருளைப் படைப்பார் என்று தோன்றுகிறது.

அந்த உண்மையான ஸ்ரீதேவியை போனி, அவர் வீட்டில் வைத்திருந்தால் தான் என்ன?

எனது மன ஒளிப்பதிவுக் கருவியில் அந்த சினிமா கடவுளைப் பிடித்துவைத்துள்ளேன். எனது செல்லுலாய்டு கனவுகளின் இதயத்தில் அவர் புனித தேவதையாக இருக்கிறார்.

ஸ்ரீதேவியைப் படைத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். அவரது அழகை காலத்துக்கும் பிடித்து சேமிக்க முடிவதற்காக சினிமா காமிராவை உருவாக்கிய லூயி லூமியருக்கும் எனது நன்றி.

ஸ்ரீதேவி குறித்த கேள்விகளுக்கு வர்மாவின் பதில்கள்
..
ஸ்ரீதேவி தனியாக இருக்கும்போது அவரிடம் உங்கள் நேசத்தைச் சொல்ல முயற்சித்தீர்களா?

எனது கட்டுரையின் மையமே அதுதான் முட்டாளே. ஒரு பக்தனால் கடவுளோடு நெருங்க முடியவே முடியாது.

ஸ்ரீதேவிக்கு உங்கள் காதலும் மதிப்பும் தெரியுமா?

நான் அவரிடம் அதை தெரிவித்தபோது அவர் நம்பவில்லை. ஏனென்றால் நான் பொய் சொல்பவன் என்றும் ஏமாற்றுக்காரன் என்பதும் அவருக்குத் தெரியும்.



Comments