Skip to main content

எம்ஜிஆரின் அரசாங்கம்


ஷங்கர்ராமசுப்ரமணியன்

பொங்கல் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாகவே எம்ஜிஆரின் பிறந்த நாளும் வந்துபோய் விடுகிறது. நாங்கள் வசிக்கும் வேளச்சேரி தண்டீஸ்வரம் மார்க்கெட் பகுதியின் முனையில் அண்ணா திமுக கொடிக்குக் கீழே எம்ஜிஆரின் புகைப்படத்துக்கு மாலையிட்டு, ஒரு ஸ்பீக்கரும் கட்டி எம்ஜிஆரின் பாடல்களை காலையிலேயே அன்று ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள். காலை ஏழு, ஏழரை மணிவாக்கில், அந்த மார்க்கெட்டில் தென்படும் நடுவயதைக் கடந்த கூலித்தொழிலாளர்கள் வரிசையாக அமர்ந்து பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அந்த நாளில்தான் அவர்கள் எல்லாம் சேர்ந்து இருந்தார்களா? இல்லை எனக்கு சேர்ந்து தெரிந்தார்களா?.
தண்டீஸ்வரம் தேவாலயத்தைச் சுற்றியும், மார்க்கெட்டிலும் பத்தாண்டுகளுக்கும் மேலாக நான் பார்த்துவரும் தாடி வைத்த நான்கைந்து கந்தல் சட்டைகளை உடுத்தி வலம்வரும் கருப்பு மனிதர், அந்தக் கூலித்தொழிலாளர்களின் உற்சாக குரல்களுக்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தார்.  எம்ஜிஆரின் சகல உடல்மொழிகளையும் அவர் பாவனை செய்தார். தாடி அடர்ந்திருக்கும் அவர் முகத்தில் கண்கள் மட்டும் வெள்ளையாக சிரிப்பவை.

அவர் நடுத்தர வயதைக் கடந்தவர். யாரிடமும் யாசகம் கேட்கமாட்டார். அவரது மையம் தண்டீஸ்வரம் தெருவில் இருக்கும் தேவாலயம்தான். பிரார்த்தனை ஞாயிறுகளில் அவர் அந்த தெருவில் வாகனங்களை ஒழுங்கு செய்பவராக, உற்சாகியாக ஒரு காவல்துறை ஆய்வாளரைப் போல பெருமையுடன் வலம்வருவார். அவரது கால் காயங்களுக்கு அன்று புதிய வெள்ளைக்கட்டுகள் போட்டிருப்பார். ஞாயிறு மாலைப் பிரார்த்தனைகள் முடிவுபெறும் வரை அந்தக் கடைவீதியில் அவரது உற்சாகமும் பாடல்களும் பொங்கி ஓடும். சந்தோஷம் பொங்குதே சந்தோஷம் பொங்குதே ...சந்தோஷம் என்னில் பொங்குதே.. என்று பாடுவார். ஞாயிறு இரவு தேவாலயத்தைச் சுற்றிய பகுதிகள் வெறிச்சோடும். அந்த நேரத்தில் உடல் வியர்க்க மூடிக் கிடக்கும் கடை ஷட்டர்களை கையில் உள்ள சிறுகழியால் அடித்துக்கொண்டே போவார். அந்த மூர்க்கத்தைப் பார்ப்பது பயங்கரமாக இருக்கும். இரவு எங்கே தங்குவார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

அடுத்தடுத்த நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக உற்சாகம் குறையும். மறைந்து திரிபவராகவே இருப்பார். சில நேரங்களில் பஜாரில் குழந்தைகள் மற்றும் பெண்களிடமும் வம்பிழுத்து விடுவார். அவர் அடி, உதை வாங்குவதையும் பார்த்திருக்கிறேன். அதன் விளைவுதான் ஞாயிற்றுக்கிழமையின் புதிய கட்டுகள். கடந்த ஆறு மாதங்களாக அவர் தனது சட்டையில் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தின் பேட்ஜை அணிந்திருக்கிறார். அவர் கடைவீதியில் தனது திருவிளையாடல்களை நடத்தும்போது, எப்போதாவது கடக்கும் போலீஸ் வாகனம் நிறுத்தி கொஞ்சம் நிதானமாக அவரைக் கவனித்துவிட்டு நகர்ந்து செல்வதற்கு இந்த பேட்ஜ் ஒரு காரணமாக இருக்கலாம்.

எம்ஜிஆர் பிறந்த நாள் அன்று கையில் சிறிய விளக்குமாறை வைத்துக்கொண்டு டீக்கடையின் முற்றத்தை, பாடல்களுக்கு நடனம் ஆடியபடியே பெருக்கினார். புழுதி புரண்டது.. தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே...நாளை நமதே...இந்த நாளும் நமதே என்ற பாடலின் முடிவில் உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவர், நடனத்தைப் பாராட்டி தேநீர் வரவழைத்துக் கொடுத்தார். காய்கறி விற்கும் பாட்டி, "இன்னைக்கு ஒனக்குக் கொண்டாட்டம் தான்" என்று சொன்னாள்.

காலை 11 மணிவாக்கில் வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் பாடல் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் அப்பகுதிக்கு காபி சாப்பிடப் போனேன். காலையில் உட்கார்ந்திருந்தவர்களில் ஓரிருவரே எண்ணிக்கையில் குறைந்திருந்தனர். இப்போது அந்த கந்தல் மனிதர் இல்லை.  பனியன் துணியில் அண்டர்வேர் தெரிய பழுப்பு வேஷ்டி உடுத்தியிருந்த ஒருவர் பாடலுக்கு ஏற்ப கையில் அபிநயம் பிடித்தபடி எம்ஜிஆரின் படத்திற்கு முன்பு நின்றிருந்தார். பாடல் நடுவில் நிற்கும்போது அவரும் உறைவார். மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று பாடல் தொடர்ந்தது. அவரும் கைகளால் அபிநயம் பிடித்தார்.
உலகம் பிறந்தது எனக்காக பாடலில் மிகவும் நம்பிக்கையாக அவரது கைகள் உயர்ந்தன. அவரது முழங்கை முழுவதும் இருந்த காயத்தழும்புகளை நீட்டி எம்ஜிஆர் முன் காண்பிப்பது போல இருந்தது.

கண்போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா? என்ற பாடலின் போது தண்டீஸ்வரம் பகுதியில் கடைவைத்திருக்கும் அண்ணாச்சி வெள்ளை வேஷ்டியில் கடந்தார். அவரது கரம்பற்றினார் அபிநயம் பிடித்தவர். அவரும் எம்ஜிஆர் பாடலுக்குள் உள்ள கதாபாத்திரம் போல தெரிந்தார். நல்ல முதலாளி, நல்ல தொழிலாளி என்ற உலகம் அந்தப் பாடல்களின் கீழே சிருஷ்டிக்கப்பட்டிருந்தது.

அப்போதைய தெருவின் சித்திரத்தைப் பார்த்தேன்..காய்கறி வண்டிகள் இரண்டில் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. மூன்று பூக்கடைகளில் பெண்கள். எம்ஜிஆரின் கற்பித உலகத்தில் அவர் பாடல்களைப் போல எல்லாம் அமைதியாக அதனதன் ஒழுங்கில் நடந்துகொண்டிருப்பது போன்ற தோற்றம். அந்தப் பாடல்களின் எல்லைக்குள் நுழைந்தவர்கள் எல்லாரும் எம்ஜிஆரின் காவியக் கதாபாத்திரங்களாக நுழைந்து வெளியே செல்வதை அந்த உலகத்திற்குள் இருந்தே நான் பார்த்தேன். உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா...கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா...

கடைகள் இன்னும் பொங்கலின் உறக்கத்திலிருந்து எழவில்லை. எம்ஜிஆரின் பாடல்களுக்குள்ளேயே நாளைக்கான நம்பிக்கையையும், மாற்றத்தையும், புரட்சியையும், நீதியையும் பாவித்து வளர்ந்த ஒருவர் நாளையல்லாத நாளை ஒன்றை நம்பி களைப்பேயின்றி தெருவில் அபிநயித்துக் கொண்டிருக்கிறார். பாடல் நிற்கும்போது மட்டும் முகம், உடல் எல்லாம் உறைந்து நிற்கிறார்.

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது...நாளை நமதே ..இந்த நாளும் நமதே..

(காட்சிப்பிழை- பிப்ரவரி இதழ்)

Comments