Monday, 23 December 2013

நடனக்கலைஞர் சந்திரலேகா - சுதந்திரத்தின் எல்லைகளை விஸ்தரித்தவர்ஷங்கர்


20 ஆம் நூற்றாண்டு,  உலகளவில் பல மாற்றங்களையும், உடைப்புகளையும் கண்ட நூற்றாண்டாகும். அடிமைப்பட்ட தேசங்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசித்ததும், சிந்தனை மற்றும் கலைகள் ஜனநாயகப்படுத்தப்பட்டு, மரபின் தடைகள் உடைந்து நவீனத்துவம் கொண்டதும் இக்காலகட்டத்தில்தான். செய்யுளாக இருந்த கவிதை வடிவம், நவீன கவிதையாகியது. நவீன ஓவியமாக மாற்றம் கொண்டது. அந்தப் பின்னணியில் இந்தியாவில் மரபாக இருந்த நடனவடிவை அதன் பழைய அலங்காரங்களைக் களைந்து நவீன வடிவமாக்கியவர் சந்திரலேகா. இவர் நடனம் என்ற வடிவத்தோடு தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. இந்தியாவில் உருவான பெண்ணிய இயக்கத்துக்கு முக்கிய தூண்டுவிசையாக இருந்தவர். நெருக்கடி நிலை   காலகட்டத்தில்,கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் உருவான நிலையில் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பியவர். போஸ்டர் வடிவமைப்பாளர்,  ஓவியர் மற்றும் கவிஞர். இந்திய வாழ்க்கை முறை மற்றும் கலைமரபின்  நல்ல அம்சங்களைப் புறக்கணிக்காமலேயே தனது கலையை நவீனப்படுத்திய முக்கியமான ஆளுமை சந்திரலேகா.
1928 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், மகாராஷ்டிர மாநிலமான வாடாவில் செல்வச்செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர் சந்திரலேகா பிரபுதாஸ் படேல்.  சிறுவயது முதலே நடனம் மற்றும் கலைகளில் ஈடுபாடு மிக்க அவர், சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, தனது வருங்காலம் நடனம்தான் என்று  முடிவுக்கு வந்தார். பெண்கள் தனியாக, அருகில் உள்ள ஊருக்கே பயணம் செய்யமுடியாத ஒரு காலகட்டத்தில், பரதம் பயில்வதற்காக தனியாக காஞ்சிபுரத்துக்கு வந்தார். தேர்ந்த பரதநாட்டிய குருவான எல்லப்ப பிள்ளையிடம் மாணவியாகச் சேர்ந்தார். 20 வயதில் எப்படி சொந்த ஊர் மற்றும் பெற்றோரைப் பிரிந்து தனியாக சென்னை வந்தார். தனது தொப்புள்கொடி உறவுகளைத் துறக்க விரும்பிய அவர் தன் குடும்பப் பெயரைத் துறந்து வெறும் சந்திரலேகா ஆனார்.  சென்னையில் ஜெமினி பாலம் இப்போது அமைந்திருக்கும் இடம் முழுமையாக வயல்கள் மற்றும் சுமைதாங்கிக் கற்களுடன் காணப்பட்டதாக ஒரு நேர்காணலில் நினைவுகூர்ந்துள்ளார் சந்திரலேகா.

குரு எல்லப்ப பிள்ளையிடம் பரதநாட்டியத்தை முறையாகப் பயின்ற அவர், அப்போதைய பிரபல பரதநாட்டியக் கலைஞர்கள் ருக்மணி தேவி மற்றும் பால சரஸ்வதி  போன்ற ஆளுமைகளின் நேரடித் தாக்கத்தையும் பெற்றார். 1950 களின் மத்தியிலேயே இந்தியாவின் முக்கியமான நடனக்கலைஞராக புகழ்பெற்றார். விமர்சகர்களின் பாராட்டுகள் குவிந்தன. அவரது தனி நடன நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளர்களின் வரவேற்பு அமோகமாக இருந்தது. பத்தாண்டுகளிலேயே தனது நடனத்தில், அவருக்குச் சலிப்பு ஏற்படத் தொடங்கியது. “ நான் யாருக்காக ஆடுகிறேன். ஏன் ஆடுகிறேன். எனக்கு சரியான அளவில் இடுப்பும், உடல் அளவுகளும் உள்ளன.  என்னை ஒரு இந்திப்பட நடிகையின் உடலைப் பார்ப்பது போலத்தானே பார்வையாளர்கள் பார்க்கின்றனர்” என்றெல்லாம் கேள்விகள் தோன்றியதாக ருஸ்தம் பரூச்சா இவர் குறித்து எழுதிய நூலில் பகிர்ந்துள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் மதுரா நகரில் என்ற பாடலுக்கு அபிநயிக்கிறார் சந்திரா. அப்போது அவரது மனக்கண்ணில் காலிக்குடங்களுடன் வறண்ட முகங்கள் நாடெங்கும் அலைந்து கொண்டிருப்பதைக் காண்கிறார். அப்போது இந்தியா முழுவதும் வறட்சி நிலவிய காலகட்டம்.  யமுனை நதியில் நடக்கும் நீர் விளையாட்டு மற்றும் நீர் செழுமையை நான் பாவமாகக் காட்டி நடனமாடிக் கொண்டிருந்தேன். ஒரு வறட்சியான சந்தர்ப்பத்தில், பஞ்ச நிலையில், நான் எதை என் நடனத்தில் சித்திரித்துக் கொண்டிருக்கிறேன்?என்ற கேள்வி அவரிடம் எழுந்தது.
 ஒரு கட்டத்தில் பரதநாட்டியத்தில் அலுப்படைந்த அவர் நடனத்தையே கைவிட்டார். அக்காலத்தில் தான் இந்தியாவில் பெண்ணிய இயக்கம் அரும்புவிடத் தொடங்கியிருந்தது. சந்திரலேகா அவர்களுடன் இணைந்து தனது ஓவியங்கள் மற்றும் போஸ்டர்களை வரையத் தொடங்கி தனது படைப்பாற்றலை வேறு திசைகளில் மடைமாற்றினார். அவர்  1980 களில் வரைந்த சுவரொட்டிகள் அப்போதைய பெண்ணியக்குரலை மிகச் சிறப்பாக பிரதிநிதித்துவம் செய்தவை. இந்தியா பெண்களைக் கடவுளாகவும் வணங்குகிறது. அவர்களை அதிகபட்சமாக வன்முறைக்குள்ளாக்குவதும் இந்தியாதான் என்ற செய்தியுடன் இருபக்கமும் பத்து கைகள் உள்ள காளியை ஒருபக்கம் கைகள் உடைந்தவராக சித்தரித்த சுவரொட்டி அக்காலத்திய பெண்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஓவியம், கவிதை மற்றும் நண்பர்களுடனான பயணங்களில் நடனம் பக்கம் வராமலேயே சந்திரலேகாவால் பல ஆண்டுகளை உற்சாகத்துடன் கழிக்க முடிந்தது. நடுவில் நவகிரஹா என்ற ஒரே ஒரு நாட்டிய நிகழ்ச்சியை மட்டுமே செய்தார்.

1985 இல் அங்கீகா என்ற நடன நிகழ்வுடன் மீண்டும் சந்திரலேகா நடனத்தை நோக்கித் திரும்பினார்.  இந்திய நடன வரலாற்றில் இது முக்கியமான திருப்பம்.  யோகா, களறி போன்ற உடல்பயிற்சி மரபையும் நடனக்கலையையும் அங்கீகாவில் சரியான விகிதத்தில் கலந்து புதுமையான வடிவைக் கொடுத்தார். அங்கீகா, பரதநாட்டியம் என்னும் வடிவம் தொடர்பாக உள்ள மரபார்ந்த கருத்துகளைக் கேள்விக்குள்ளாக்கியது.

அடுத்து சந்திரலேகாவின் தயாரிப்புகளான லீலாவதி, எந்திரா போன்ற படைப்புகள், இந்திய வேருடனேயே இங்குள்ள நடனம் நவீனமுகம் கொள்ள முடியும் என்பதைக் காட்டின.
1991 இல் அவர் இயக்கிய ஸ்ரீ, பெண்களின் படைப்பாற்றலுக்கான அர்ப்பணிப்பாக இருந்தது. முதுகுத் தண்டுவடத்தைப் படிமமாக கொண்ட இந் நடன நிகழ்வு, காலம் காலமாக பெண்களின் தண்டுவடம் நொறுக்கப்படுவதையும், அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு எடுக்கும் முயற்சிகளையும் நடனவடிவில் காட்டியது.

சந்திரலேகாவின் படைப்புகள் அனைத்தும் பெண் என்ற சக்தியைக் கண்டறியும் பயணம் தான். ஒருகட்டத்தில் அவரது படைப்புப் பயணம் ஒரு உடலுக்குள்ளேயே இருக்கும் ஆண்மையையும், பெண்மையையும் கண்டறிந்து முழுமைகொண்டது. பெண்கள் நடக்கும்போதும், அமரும் போதும், ஒரு குழந்தையை இடுப்பில் தாங்கியிருக்கும்போதும் உடலை ஒரு ஆற்றால் வடிவமாய் நான் பார்க்கிறேன்.  பெண்கள் தண்ணீர் குடத்தை  அல்லது குழந்தையை இடுப்பில் தாங்கியிருக்கும் நிலை அழகான் ஒரு நிலை.  நம்முடைய உபயோகத்துக்கும் உடலின் வடிவத்துக்குமான பொருத்தம். நம் உடலுள் எவ்வளவு ஆற்றல் பொதிந்திருக்கிறது என்று நம்மால் அறிய முடிவதில்லை. அதனால் தான் நான் நடனத்தில் எது செய்தாலும் அதை உடல் தொடர்பான அறிதலுக்காகவே செய்கிறேன்.
சந்திரலேகா நடனத்தை வாழ்விலிருந்து தனியான பொழுதுபோக்கு வடிவமாகப் பார்க்கவில்லை.  உடலுக்கும் இயற்கைக்கும் உள்ள உயிரோட்டமான உறவு, உடலுக்கும் உடல் செய்யும் வேலைகளுக்கும் உள்ள தொடர்பு, உடலுக்கும் சடங்குகளுக்கும் உள்ள உறவுகள் எல்லாம் போய் நடனம் ஒரு காட்சிப் பொருளாக மாறிவிட்டதாக அவர் உணர்ந்தார். முழுமையான மரபுவாதம், நவீனம் இரண்டுமே அவருக்கு சிக்கலாகத் தெரிந்தன. அதனால் தன் படைப்பாற்றலைப் பயன்படுத்தி அவற்றிலிருக்கும் தடைகளைச் சிதறடித்து தற்கால வடிவமாக தன் நடனத்தை மாற்றினார்.
தன் வாழ்க்கை முழுவதும் சந்திரலேகா, திருமணம் போன்ற எந்த சம்பிரதாய உறவுகளிலும் சிக்கிக்கொள்ளாமல் சுதந்திர ஜீவியாகவே கழித்தார். ஒரு நடன ஆளுமையாக அறியப்பட்ட அவர், தன் நடனத்தில் சலிப்பு வந்தபோது கூட அச்சப்படாமல் அதைத் துறந்து வேறு காரியங்களில் ஈடுபடும் துணிச்சல் கொண்டவர் அவர். பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் அவர் உருவாக்கியிருந்த வீடு, வேப்ப மரங்களால் சூழப்பட்டது. தனது படைப்புகளை விட அதிகம் அவர் 75 வேப்பமரக்கன்றுகளை தன் கையால், நட்டு வளர்த்த வகையில் அதிகம் பெருமை கொண்டிருந்தார். இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் கூடி இளைப்பாறி உரையாடும் பொதுவெளியாக இருந்தது. அவரது சிறந்த நண்பர்களாக உலகப்புகழ் பெற்ற புகைப்படக்கலைஞர் ஹென்றி கார்ட்டியர் ப்ரெஸ்சானும், ஓவியர் தசரத் பட்டேலும் இருந்தனர்.  வங்கக்கவி ஹரீந்திர சட்டோபாத்யாயா இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர். எழுத்தாளரும் கலைவிமர்சகருமான சதானந்த் மேனன் சந்திரலேகாவின் பிற்காலத்தில் தோழராக அவரது இறுதிக்காலம் வரை வாழ்ந்தவர்.

தனது இறுதிக்காலம் வரை வயோதிகம் கொடுக்கும்  முதுமையை, மன அளவில் அடையாமல் ஒரு குழந்தையின் உற்சாகத்துடனும், எழிலுடனும் இருந்தார். அவரின் அழகுக்கு முன்னால் வயது என்பது ஓடிப்போய்விட்டது என்று அவரைப் பற்றிய நினைவுக்கட்டுரை ஒன்றில் எழுத்தாளர் ந.முத்துசாமி நினைவுகூர்கிறார்.  சந்திரலேகா 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி காலமானார். சந்திரலேகாவுக்கு தமிழ் சினிமா தன் வகையில் அவரது வாழ்நாளிலேயே நினைவுகூர்ந்திருக்கிறது . மணிரத்னத்தின் திருடா திருடா படத்தில் வரும் கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு பாடலில் வரும் சந்திரலேகாஆஆஆஆஆஆஆஆ….இவர்தான்.   
( தி இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் முழுவடிவம்)

Tuesday, 3 December 2013

இரு குற்றவாளிகள்


ஹிட்ச்காக் அவர்களே, இன்னும் பிறக்காத ஒரு குற்றத்துக்காக உங்கள் வீட்டு ஜன்னலை இரவில் திறக்கும் போது..காதலி மரியா கோடாமாவின்
மென்கரங்கள் தவிர..எல்லாமே கற்பனையின் சாத்தியங்கள்தானோ
என்று உதடுகள் முணுமுணுக்க அநிச்சயத்துடன் கைத்தடியை அந்தரத்தில்
அசைத்தவாறே வீதியில் நடந்துபோகும் போர்ஹேயை..ஒருமுறையாவது..ஒரு முறையாவது..பார்த்திருக்கிறீர்களா? ஹிட்ச்காக்

மதிப்பிற்குரிய ஹிட்ச்காக் அவர்களே

ரியர் விண்டோ சினிமாவில், கால்முறிந்ததன் காரணமாக, வீட்டிலேயே ஓய்வெடுக்க நேரும் புகைப்படக்காரன் ஜெஃப், தன் நேரத்தைக் கழிக்க  அண்டை வீடுகளை, தன் வீட்டு ஜன்னல்வழி வேடிக்கை பார்க்கத் தொடங்குகிறான். தன்னை ஒரு ஜோடிக்கண்கள் பின்தொடர்வதை அறியாத ஒரு மாடிவாசி- அவள் பெயர் செல்வி.டார்சோ- நடனபாவத்தில் தன் பிராவை உற்சாகமாகக் கழற்றி எறிகிறாள். ஜெஃப்பின் ஜூம்லென்ஸ் மேலே செல்கிறது. செல்வி. டார்சோவின் வீட்டின் கூரையில் புறாக்கள் மேய்கின்றன. செல்வி. டார்சோவின் நடனம் நிற்காமல் தொடர்கிறதா ஹிட்ச்காக்? அவள் வீட்டுக்கூரையில் மேய்ந்த புறாக்கள் இப்போது எங்கே மேய்கின்றன? ஹிட்ச்காக்!

Sunday, 1 December 2013

நான் அனுமன்

ஷங்கர்ராமசுப்ரமணியன்


இந்த உலகம் முழுமையும்
உங்களிடமே இருக்கட்டும்
அதன் ஓரத்தில்
எனக்கு விளையாட
சிறு மைதானம் உண்டு
சேகரிக்க சில கூழாங்கற்களும்
சிறகுகளும் உண்டு
ஓயாமல் என்னை விளையாடும்
ஒரு பந்தும் உண்டு

000


லட்சம்
ஜோடிக் கால்கள்
உள்ளே துடிக்கும்
பந்தில்
இருக்கிறது
விளையாட்டு
என்னிடம் அல்ல

Monday, 18 November 2013

ஆம் இவர்கள்
ஆம்
இவர்கள்
இன்னொரு கிரகத்தில் இருந்து
வந்த பறவைகள்
இவ்வுலகின் களங்கம்
ஏறா
கண்கள் எங்கோ
மிதக்க
ஏன்
வெயிலில்
பேருந்து நிறுத்தங்களில்

புழுக்கம் கொண்ட
சமையலறைகளில்
அலுவலகங்களில்

Tuesday, 5 November 2013

முண்டகக்கண்ணி அம்மன் ரயில் நிறுத்தம்


ஷங்கர்ராமசுப்ரமணியன் 


முண்டகக்கண்ணி அம்மன் ரயில் நிறுத்தத்துக்குள்
ரயில் நுழைகிறது
ரயில் நிற்காத
யாரும் ஏறாத
இறங்காத
ஸ்டேசன் அது.
அங்கே இதுவரை காதலிக்கவில்லை
குறுஞ்செய்திகளைப் பரிமாறவில்லை
எதையோ தொலைத்துவிட்டு
பிளாட்பாரத்தில் நின்று அழுததும் இல்லை
யாரும்
ஆனாலும்
முண்டகக்கண்ணி அம்மன் ரயில் நிலைய இருட்டை
ரயில் சற்று மெதுவாகவே கடக்கிறது.

Thursday, 31 October 2013

ஆஸ்கர் வைல்டை ரயிலில் படித்தபோது
ஆஸ்கர் வைல்டை ரயிலில் இருந்து படித்த போது, ஒரு கூற்றில் என்னை அவன் வெளியே எறிந்துவிட்டான். சூரியகாந்தி வயல்களில் இருந்து கிளிகள் பறந்தெழுந்தன. ஒரு புத்தகம் இப்படித்தான் ஒருவனை வெளியே விரட்டியடிக்க வேண்டும். பல யுகங்களாகப் பார்த்த மரங்கள் தான். அனைத்தும் புதிதாகத் தெரியத் தொடங்குகின்றன. பூக்கள் திருவிழா கோஷம் போடுகின்றன .  இயற்கைக்கு தன்னுணர்வுள்ள அழகோ, நீதியோ, மகிழ்ச்சியோ, முழுமையோ இல்லை. இயற்கைக்கு நான் வேண்டாம். எனக்குத் தான் அவர்கள் வேண்டும். இயற்கையோடு இணைந்து அதை அழகானதாகவும், நீதியுணர்வு கொண்டதாகவும், மகிழ்ச்சியாகவும், முழுமையாகவும் நானே மாற்றிக்கொள்கிறேன். அதை மறுபடைப்பு செய்கிறேன். நான்தான், நான் தான் காலம்காலமாக அதை மனிதாயப்படுத்தி என் கவிதையில், என் ஓவியத்தில், சிற்பங்களில், பாடல்களில், கதைகளில் இணைத்து அதற்கு ஒரு முழுமையைத் தருகிறேன்.

Saturday, 12 October 2013

எண்ணற்ற ஜன்னல்கள் மற்றும் வாயில்கள்

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த ஃப்ரன்ஸ் காஃப்கா, நவீனமாகி வரும் உலகில் வாழ நேரந்த மனிதனின் துயரங்களை இலக்கியம் வழியாக மிக நுட்பமாக பரிசீலனை செய்தவர். மாறிவரும் மனித உறவுகள், அவனின் தனிமை, தனிமனிதனுக்கும் அமைப்புகளுக்கும் இடையிலான மோதல்கள், அமைப்புகள் முன் மனிதன் சின்னஞ்சிறிய பரிதபாகரமான உயிராக மாறிநிற்பது ஆகியவற்றை காஃப்கா துல்லியமாக விசாரணை செய்துள்ளார்.
மனிதனை ஆரோக்கியமாகவும்அகிம்சை முறையிலும் சிறைப்படுத்திய, அவர்களை வளர்ப்பு மிருகங்களாகச் சுருக்கிய அலுவலகம் என்னும் தீங்கைப்  பற்றி தனது உருவக கதைகள் வழியாக பல்வேறு சித்திரங்களை காஃப்கா உருவாக்கியுள்ளார்.  
விசாரணை நாவலில் கண்ணுக்குப் புலப்படாத அமைப்பின் கீழ்நிலை ஊழியர்களால் யோசப் க. ஒரு நாள் காலை, எந்தக் காரணமும் இல்லாமல் அவன் அறையில் படுக்கையிலிருந்து எழும்முன்பாகவே கைது செய்யப்படுகிறான். அதைத் தொடர்ந்து தன்னை எப்படியாவது குற்றத்தின் பிடியிலிருந்து விடுவிக்க தொடர்ந்து போராடுகிறான். நீதி அமைப்பின் குளறுபடிகளை தன் மீதான தவறாக போடப்பட்ட வழக்கின் வழியாக சரிசெய்யவும், எதிர்த்துப் போராடவும் துணிபவன். ஆனால் படிப்படியாக யோசப் க. நம்பிக்கை இழக்கிறான். நீதி விசாரணைகளில் ஏற்கனவே காத்திருக்கும் எண்ணற்ற நபர்களைப் போல கிட்டத்தட்ட மூடநம்பிக்கைகளுக்குத் தள்ளப்படுகிறான். யோசப் க, கைது செய்யப்பட்டவனே தவிர அவனுக்கு எதுவுமே மறுக்கப்படவில்லை. காதலிப்பதற்கோ, உணவுண்பதற்கோ, நடமாடுவதற்கோ எதுவும் மறுக்கப்படவில்லை. தாம் கண்ணுக்குப் புலனாகாத ஒரு அமைப்பால் கண்காணிக்கப்படுகிறோம் மற்றும் விரட்டப்படுகிறோம் என்ற பிரக்ஞை தரும் தீராத வலியுணர்வைத் தவிர அந்தக் கைது எதையுமே யோசப் க.விடமிருந்து பறிக்கவில்லை. இறுதியில் தான் செய்த குற்றம் எதுவென்று தெரியாமலேயே 31 ஆவது பிறந்த நாள் அன்று இருட்டில் அகௌரவமான முறையில் இரண்டு காவலர்களால் தண்டிக்கப்பட்டு உயிர்துறக்கிறான்.
21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருக்கும் நமக்கு காஃப்காவின் படைப்புகள் பொருத்தப்பாட்டுடன் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டியது அவசியம். காஃப்கா அவர் காலத்தில் இருந்த சில, பல நன்மைகளை தன்னகத்தே வைத்திருந்த நவீன ஜனநாயக அரசு மற்றும் நிர்வாக, நீதி அமைப்பில் நேரத்தொடங்கியிருந்த அபத்த நடைமுறைகளையும், குளறுபடிகளையும் ஆராய்ந்துள்ளார்.
இன்று நாம் காணும் ஜனநாயக அரசு மற்றும் நிர்வாக அமைப்பின் சர்வ வல்லமை சென்ற நூற்றாண்டில் வெளிப்படையாக தெரிந்ததுபோல கண்ணுக்குப் புலப்படும் தன்மை கொண்டதல்ல. அதன் இருத்தலுக்கு ஒரே வெளிப்படையான நியாயமாக திகழ்ந்த வெகுமக்களின் நலன்களை நிர்வகிப்பதிலிருந்தும் விலகி விட்டது. அதன் அதிகாரத்துவத்தையும், வல்லமையையும் புதிய அமைப்புகள் மூலம் நிர்வகிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குழுவின் மேல் செலுத்தும் உரிமையையும், எதேச்சதிகாரத்தையும் பல கண்ணுக்குத் தெரியாத அமைப்புகள் பெற்றுவருகின்றன. இந்தச் சூழலில் நம் காலத்தின் எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள, விமர்சிக்க காஃப்கா மேலும் பொருத்தபாடு உடையவர் ஆகிறார்.
எப்போதெல்லாம் ஒரு தனிமனிதனின் மேல் புலப்படாத ஒரு அமைப்பின் கரம் நீள்கிறதோ, எப்போது தன் மேல் நடக்கும் தாக்குதல்களுக்கு காரண-காரியங்களைத் துலக்கமுடியாமல் மனிதன் அவதியில் சகலத்தையும் பிராண்டி, உழன்று தன்னையும் துன்பத்திற்கு ஆட்படுத்திக் கொள்கிறானோ அதுவெல்லாமே காஃப்காவுக்கு நெருக்கமான தருணங்கள் தான். ரகசிய மரணதண்டனைகளும், அணுஉலைகள், அணைகள் போன்ற திடீர் திட்டங்களும், நம் குடிமக்களின் அங்கீகாரம் பெறப்படாமலேயே திணிக்கப்படும் நிலம் இது. பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் இல்லை. நீதிமன்றங்களில் நீதிபதி இல்லை. தண்டனைகளைத் தீர்மானிப்பது ஊடகங்களின் விவாத மேடைகள். முடிவுகள் எங்கோ, யாராலோ, யார் நலனுக்காகவோ எடுக்கப்படும் நிலையில் நமது நாடாளுமன்றம், ஒரு மெய்நிகர் தோற்றமே. சமீபத்தில் ஒரு நிறுவனத்தின் சார்பாக பெட்ரோலியக் குழாய்கள் தஞ்சையின் வேளாண்மை நிலங்களில் ஊடுருவிய சம்பவம் ஒரு உதாரணம்.
அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்கள்- தொழிலாளர்கள் முதல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள்வரை- தாங்கள் பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி, அதற்கான சாட்சியங்களையும் திரட்டி நீதிமன்றத்தில் ஒப்படைத்து குற்றத்தை நிரூபிக்க வேண்டிய நீதிஅமைப்பின் கீழ் நாம் இருப்பதால், காஃப்கா இன்னும் பொருத்தப்பாடு உடையவர் ஆகிறார்.      

(தொடரும்)   
(சிலேட் இதழ்)